‘‘இது என்னுடைய பஸ்.. உடனடியாக கீழே இறங்கு..” தமிழ் மாணவர்களுக்கு நடந்த அநீதி - viedo

 

ஹட்டன் டிப்போவுக்கு சொந்தமான நாவலபிட்டியில் இருந்து கினிகத்தேனை ஊடாக ஹட்டனுக்கு பயணிகளை ஏற்றிச்செல்லும் அரச பஸ் ஒன்றின் நடத்துனர் தமிழ் பாடசாலை மாணவர்களை பலவந்தமாக பஸ்ஸில் இருந்து வெளியேறுமாறு பணித்த சம்பவம் ஒன்று நேற்று (06) காலை பதிவாகியுள்ளது.

ஹட்டன் கல்வி வலையத்திற்குட்பட்ட கினிகத்தனை கடவளை விக்னேஸ்வரா கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்களான இவர்களைப் பஸ்  நடத்துனர் பஸ்ஸில் இருந்து வெளியேறுமாறு கூறியுள்ளார்.

பாடசாலை மாணவர்களுக்கு என்று இலங்கை போக்குவரத்து சபையின் ஊடாக வழங்கப்படும் பருவச் சீட்டை, பஸ்  நடத்துனரிடம் காண்பித்த போதும், பருவச் சீட்டை வைத்திருக்கும் மாணவர்களைப் பஸ்ஸில் இருந்து வெளியேறுமாறு நடத்துனர் தொடர்ந்து வலியுறுத்தியதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

நாவலபிட்டியிலிருந்து கினிகத்தனை ஊடாக ஹட்டன் வரை செல்லும் அரசப் பஸ்ஸில், அதிகமாக தமிழ் மாணவர்களே இவ்வாறு புறக்கணிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

'இது அரசாங்கத்துக்கு சொந்தமான பஸ். உங்களுடைய சொந்த பஸ் அல்ல. பாடசாலை மாணவர்களாகிய நாங்கள் பணம் செலுத்தி பருவச் சீட்டைப் பெற்றுள்ளோம். எங்களால் பஸ்ஸை விட்டு வெளியேற முடியாது' என்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதற்குப் பதிலளித்த பஸ்  நடத்துனர், 'ஆம், இது என்னுடைய பஸ்தான. நீங்கள் அனைவரும் பஸ்ஸை விட்டு இறங்குங்கள்' எனக் கூறும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக, அந்தக் காணொளியை மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஸ்ரீதரன் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதோடு, தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளார்.

தமிழ் பாடசாலை மாணவர்களுக்கு இதுபோன்ற அநீதிகள் தொடர்ந்து இடம்பெற்று வருவது தொடர்பாக, ஹட்டன் டிப்போவின் முகாமையாளர் தொடர்புகொண்டு, இது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பழனி திகாம்பரம் பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஹட்டன் டிப்போவின் முகாமையாளர் தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் குறிப்பிட்டார்.